பா. ராகவன்

Pa. Raghavan | Writerpara.com | Paper

தில்லிக்குப் போன விண்வெளி வீரன்

தில்லி உலகப் புத்தகக் கண்காட்சிக்குச் சென்றுவந்தேன். எனக்குத் தனிப்பட்ட முறையில், பணி சார்ந்து பேருதவியாக அமைந்த அனுபவம். எனினும் பொதுவில் பகிர்ந்துகொள்ளவும் சில விஷயங்கள் உண்டு. வந்ததுமே அதுபற்றி எழுத நினைத்தேன். ஆனால் முடியவில்லை. காரணம் கால்வலி.

ஏற்கெனவே உடல்நலம் சரியில்லாத நிலையில்தான் தில்லிக்குச் சென்றேன். நல்ல மலேரியாவும் சுமாரான சிக்குன் குன்யாவும் இணைந்து வந்து சென்னை புத்தகக் கண்காட்சி முடிந்ததும் என்னை அணைத்தன. [செபுகாவில் கொசுத்தொல்லை அதிகம்.] கொஞ்சம் சொஸ்தப்படுத்திக்கொண்டு சங்கர் தயாள் சர்மா மாதிரி நடந்து, ஒருவாறு சமாளித்து தில்லிக்குச் சென்று விட்டாலும் அங்கே பிரகதி மைதானில் நீதி கேட்டு நெடும்பயணம் மேற்கொள்ள வேண்டியிருந்ததால் சிக்குன் குன்யா வலி அதன் உச்சத்துக்குச் சென்றுவிட்டது. Read the rest of this entry »

சுகம் பிரம்மாஸ்மி – 7

இளங்கோவன் ஒரு நாத்திகர் என்று ரங்கராஜன் சொன்னது எனக்கு மிகவும் வியப்பான விஷயமாக இருந்தது. அவர் குருகுல வாசம் செய்த இரு இடங்களுமே சாமிநாதய்யார் தமது என் சரித்திரத்தில் விவரிக்கும் சைவ மடாலயங்களுக்கு நிகரானவை. ஆசார அனுஷ்டானங்கள் மிக்க, கடும் நியம நிஷ்டைகள் கடைப்பிடிக்க வேண்டிய இடங்கள். முதலாவது கி.வா. ஜகந்நாதன் பள்ளி. அடுத்தது ஏ.என். சிவராமன் பள்ளி.

இந்த இரண்டு பத்திரிகை உலகப் பெரியவர்களையும் நான் அதிர்ஷ்டவசமாக ஓரிருமுறை சந்தித்திருக்கிறேன். வணக்கம் சொல்லியிருக்கிறேன். ஆனால் பழக வாய்ப்புக் கிடைத்ததில்லை. ஏ.என்.எஸ். அவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டு, யார் மூலமாவது அறிமுகம் கிடைத்தால் நன்றாக இருக்குமே என்று தேடிக்கொண்டிருந்த நாள்களில் அவர் மிகவும் முதுமை எய்தியிருந்தார். பத்திரிகைத் துறையிலிருந்து விலகியுமிருந்தார். ஆனால் தள்ளாத வயதிலும் குர்ஆனைப் படிக்கவேண்டுமென்பதற்காக அரபி கற்றுக்கொண்டிருந்தார் என்று கேள்விப்பட்டேன்.

கி.வா. ஜகந்நாதனை எனக்குத்தான் தெரியாதே தவிர என் அப்பா, பெரியப்பாவுக்கெல்லாம் வெகு நன்றாகத் தெரியும். சைதாப்பேட்டையில் என் பெரியப்பா நடத்திவந்த பாரதி கலைக்கழகக் கூட்டங்களுக்கெல்லாம் வந்திருக்கிறார். ஒடுங்கிச் சுருங்கிய குறுந்தேகம். கதராடைக்கு மேலே கத்திரிப்பூ நிறத்தில் மேல் துண்டு அணிந்திருப்பார். குரலெழுப்பாமல் பேசுவார். சிரிக்கச் சிரிக்கப் பேசுவார். ஒரு தவளை பேசுவது போலிருக்கும். அவர் யார், எத்தனை பெரிய மனிதர் என்றெல்லாம் சற்றும் அறியாத வயதில் ஒரு சில சமயங்களில் அவரது சொற்பொழிவுகளை மட்டும் கேட்டிருக்கிறேன். நான் வளர்ந்த சூழலன்றி அதற்கு வேறு காரணங்கள் கிடையாது.

இளங்கோவன் இந்த இருவரிடமும் தமிழ் படித்தவர். பத்திரிகைத் துறையின் அடிப்படைகளைப் பயின்றவர். இந்த விவரத்தை அவர் எனக்கு அப்போது சொன்னதில்லை. ஆனால் கி.ராஜேந்திரன் ஒரு சமயம் சொன்னார். ‘தப்பில்லாம எழுத அவருகிட்ட கத்துக்கங்க சார். தமிழ் சுத்தமா இருக்கும்.’

எனக்கு அப்போதெல்லாம் ஒரு நம்பிக்கை இருந்தது. சுத்தமான தமிழ் என்பது போரடிக்கக்கூடியது. சுவாரசியம் என்பது சுத்தம் விலக்கினால்தான் வரும். Read the rest of this entry »

சுகம் பிரம்மாஸ்மி – மீண்டும்

2009ம் ஆண்டுத் தொடக்கத்தில் சுகம் பிரம்மாஸ்மி என்றொரு தொடரை இத்தளத்தில் எழுத ஆரம்பித்தேன். ஆறு அத்தியாயங்கள் வரை எழுதினேன். பிறகு தொடர இயலாது போய்விட்டது. பல்வேறு பணி நெருக்கடிகள், கவனச் சிதறல்களே காரணம்.

இன்றைக்குச் சற்று நேரம் முன்பு என் நண்பர் ஒருவருடன் – அவர் ஒரு நல்ல நாத்திகர் – கடவுளைப் பற்றியும் சாதுக்கள் பற்றியும் தத்துவங்கள் பற்றியும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருக்க நேர்ந்ததில், பாதியில் விட்ட இத்தொடரை மீண்டும் தொடரலாம் என்று தோன்றியது.

இதனைப் பல வாசகர்கள் மிகுந்த ஆர்வமுடன் வாசித்து வந்ததை நான் அறிவேன். தொடர்ந்து எழுதாததற்கு வருத்தம் தெரிவித்துப் பலபேர் மின்னஞ்சல் எழுதியிருந்தார்கள். முதல் அத்தியாயத்திலேயே நான் சொன்னதுபோல, இது திட்டமின்றி ஆரம்பித்த தொடர். அதனால்தான் பாதியில் நின்றது. இப்போதும் திட்டமின்றியே தொடர்கிறேன். எவ்வளவு போகிறதோ போகட்டும், அதன் இஷ்டத்துக்கு.

உங்களுக்கு மறந்திருந்தால், முதல் ஆறு அத்தியாயங்களை இங்கே வாசிக்கலாம்.

ஏழாவது அத்தியாயம் நாளை வரும்.

மயிலைத் திருவிழா படங்கள்

மயிலாப்பூர் ஃபெஸ்டிவல் நேற்று முதல் நடக்கிறது. நேற்று சில படங்கள் எடுத்தேன். சுமாராக வந்தவற்றுள் சில இங்கே. Read the rest of this entry »

ஸ்ரீபார்வதி அன்லிமிடெட்

பாரதியாருக்குப் பிடித்த மாதிரி சுற்றிலும் பத்துப் பன்னிரண்டு தென்னை மரங்கள். எனவே நிழல். கால் வைக்கும் இடமெல்லாம் புல்வெளி. புல்லுக்கு நடுவே பாத்தி கட்டி மூங்கில் கழிகள் நட்டு, கூம்பு வடிவ ஓலைக்கூரை. கொட்டிக்கொண்டு ஓடும் காற்று. நடுவே நீள டேபிள் போட்டு எதிரும் புதிருமாக நாற்காலிகள். இங்கொரு தொட்டில், அங்கொரு வட்டில்.

‘சார் வாங்க! உக்காருங்க!’ என்று முகம் மலரக் கூப்பிடுகிறார் பணியாளர். இயற்கைச் சூழலின் இதத்தை அருந்தியபடி நாற்காலியில் உட்கார்ந்ததும் சூடாக ஒரு கிளாஸ்  ரசம் வருகிறது. சூப் என்பது மேலை கலாசாரம். ரசமே நமது கலாசாரம். தக்காளி மணக்கும் அமர்க்களமான மிளகு ரசம்.

சே, என்ன ருசி! இன்னொரு தம்ளர் கேட்கலாமா? நினைப்பதற்கு முன்னால் பின்னாலிருந்து குரல் கேட்கிறது. ‘இன்னொரு தம்ளர் ரசம் வேணுமா?’ Read the rest of this entry »